Wednesday, 27 July 2011

ஹிட்லர் - நாயாக நடத்திய தந்தையும், வீணாக கழிந்த இளமையும்..



           உலகின் மிகப்பெரிய கமாண்டர்களில் ஒருவரான ஹிட்லர், சில பெரும் தவறுகளை செய்ததால் வீழ்ச்சியடைந்தார்.. அவரின் இளமைக்காலத்தில் வருங்காலத்தில் தான் ஒரு மிகப்பெரிய உயரத்தை அடைவோம் என்று அவருக்கே கூட தெரிந்திருக்க வாய்ப்பில்லை.. உயரத்தில் இருந்த போது, மிருகமாக மாறி, வீழ்ச்சி அடைவோம் என்றும் உணர்ந்திருக்க வில்லை..
           ஜெர்மனி நாட்டையே தனது கையசைவில் வைத்திருந்த ஹிட்லர் ஜெர்மனியர் இல்லை.. ஆஸ்திரியாவில் பிறந்து, ஜெர்மனிக்கு குடியேறியவர்.. (மண்ணின் மைந்தன் குரல் எழுப்ப பால் தாக்கரே அங்கே இல்லை போலும்..)
           ஹிட்லரின் பாட்டிக்குத் தன கணவர் யார் என்றே தெரியாது என்றும், அவரை ஏமாற்றியவர் ஒரு யூதர் என்றும், அதனால் தான் பிற்காலத்தில் யூத இனத்தை அழிக்க ஹிட்லர் கிளம்பியதாகவும், ஆதாரமில்லாத தகவல்கள் கூறுகிறது.. ஹிட்லரின் தந்தை அலோய்ஸ், தந்தை பெயர் தெரியாத காரணத்தாலேயே எப்பொழுதும் சோகமாகவே காணப்படுவாராம்.. 
          அலோய்ஸ் கண்டிப்பான தந்தை.. சுங்க இலாகாவில் சாதாரண அதிகாரி.. அவர்  ஹிட்லரையும் அரசுப்பணியில் சேர்க்க விருப்பப்பட்டார்.. ( அரசையே நிர்வகிக்க போகிறார் எனத்தெரியாமல்.. ) ஆனால் ஹிட்லரின் விருப்பமோ ஓவியராக வேண்டும் என்பது..


        குடிப்பழக்கம் கொண்ட தந்தை, ஹிட்லரின் தாயை போதையில் ஏசுவது ஹிட்லருக்கு அவரின் மேல் வெறுப்பை அதிகரித்தது.. நிதானமாக இருந்தாலும் குடும்பத்தினரை அடிமையாக நடத்துவார்.. ஹிட்லரையும், வீட்டில் உள்ள நாயையும் ஒரே மாதிரிதான் நடத்துவார்.. 'அடால்ப்' என்று பெயர் சொல்லி ஹிட்லரை கூப்பிட மாட்டாராம்.. அலோய்ஸ் ஒரு விசிலை எடுத்து ஊதியதும், ஹிட்லர் ஓடிவந்து 'அட்டென்ஷ'னில் நிற்க வேண்டும்..  
       ஆனால் ஹிட்லருக்கு பதினாலு வயதிருக்கும் போதே, அவர் தந்தை இறந்துவிட்டார்.. மாதாமாதம் வரும் அரசாங்க உதவிப்பணத்தில் குடும்பம் ஓடியது.. பதினெட்டு வயதானவுடன் அம்மாவிடம் பணம் வாங்கிக்கொண்டு, ஓவியராக போகிறேன் என்று சொல்லி, ஆஸ்திரியாவின் தலைநகர் வியன்னாவுக்கு ரயிலேறி விட்டார்.. ஆனால் பிற்காலத்தில் ஜெர்மனிய வரலாற்று புத்தகங்களில், புதியதொரு சித்தாந்தத்தை உருவாக்க வேண்டும் என்று ஹிட்லர் தாயை பிரிந்ததாக கூறப்பட்டது.. ஆனால் உண்மையிலேயே அவர் வியன்னாவின் 'Art Academy' யில் சேரவே தாயை பிரிந்தார்.. ஆனால் அதற்கான நுழைவுத்தேர்வில் தோல்வி அடைந்தார்.. அடுத்த வருடமும் முயற்சி செய்தார்.. ஆனால் இம்முறை தேர்வில் கலந்து கொள்ளவே அனுமதியில்லை.. அவமானங்களும் தோல்விகளுமே மிகப்பெரிய சாதனையாளர்களின் இளமைக்காலத்தை நிரப்புகிறது.. ( அமிதாப், இளமைக்காலத்தில் குரல் சரியில்லை என டெல்லி வானொலி நிலையத்தால் நிராகரிக்கப்பட்டது என் நினைவிற்கு இப்போது வருகின்றது..)
       ஹிட்லரின் தாயும் அச்சமயத்தில் இறந்து போனார்.. தாயின் சேமிப்பும், ஒரு வீடும் ஹிட்லருக்கு வந்து சேர்ந்தது.. மாணவராக இல்லையெனில் உதவிப்பணம் நின்றுவிடும் என்பதால், தான் ஒரு மாணவர் எனப் பொய்யான சர்ட்டிபிகேட் தயாரித்து உதவிப்பணம் தொடர்ந்து வருமாறு பார்த்துக்கொண்டார்.. ஹிட்லரின் கில்லாடித்தனம் இங்குதான் முதன்முதலாக வெளிப்பட்டது..
       இக்காலக்கட்டத்தில் ஹிட்லர் நாடோடியாக திரிந்தார்.. தெருவோர டீக்கடைகளில் நாளிதழ்களை ஒருவரி விடாமல் படிக்கும் பழக்கம் அப்போதுதான் தோன்றியது.. அவருக்கு அரசியல் ஈடுபாடு உருவானதும் அப்போதுதான்.. ( டீக்கடைகளில் நாளிதழ் படிப்பவர்களிடம் உஷாராக இருக்கவும்.. அவர்கள் வருங்காலச் சர்வாதிகாரிகளாக மாறலாம் ). தான் வரைந்த ஓவியங்களை விற்று காலத்தை ஓட்டினார்.. இது வரையிலும் அவருக்கு ஒரு நண்பன் கூட கிடைக்கவில்லை.. ஏனெனில் யாரிடமும் அவர் பேசாமல் அவர் எப்போதும் இறுக்கமாகவே இருப்பது தான் காரணம்...( இளமையில் ஒரு நண்பனை கூட பெற முடியாதவர், பிற்காலத்தில் லட்சக்கணக்கான மனிதர்களை தனது மந்திரப்பேச்சால் ஆட்டிப்படைத்தது எத்தகைய சாதனை...)
       பணம் கரைந்தது.. பிழைக்க வழி தேடி ஜெர்மனிக்கு வந்தார்.. வாழ்வில் எதாவது சாதித்து சிறிய அளவிலாவது 'ஹீரோ' ஆகவேண்டும் என்ற எண்ணம் தோன்றியது  அப்போதுதான்.. ஓவியராக முடியவில்லை.. ராணுவத்திலாவது சேரலாம் என்றெண்ணி ஜெர்மனிய ராணுவத்தில் சேர்ந்தார்.. அப்போது அவருக்கு வயது இருபத்தைந்து.. முதல் உலகப்போர் தொடங்கிய சமயம் அது..


        இதுவரை ஹிட்லரின் வாழ்க்கை முழுவதும் தோல்விமயமே.. அடிமைத்தனமான குழந்தை பருவம்.. பள்ளிப்படிப்பையும் அவர் முடிக்கவில்லை.. பிறகு ஓவியராகும் முயற்சியிலும் படுதோல்வி.. வேலை இல்லாமல் வியன்னா நகரில் நடோடித்தனமான அலைச்சல்.. இளம்வயதிலேயே பெற்றோருடைய இழப்பு.. ஒரு நண்பர் கூட கிடையாது.. காதல் என்பது இல்லவே இல்லை.. ராணுவத்திலும் பெரிதாக வேலை உயர்வு கிடைக்கவில்லை..


        ஹிட்லர் பிறந்தது 20, ஏப்ரல் 1889 -இல். இறந்தது 30, 1945 -இல். இந்த ஐம்பத்தாறு ஆண்டுகளில், முதல் முப்பது௦ ஆண்டுகள் ஹிட்லர் என்று ஒரு மனிதர் இருந்தார் என்பது அவருடைய சொந்த ஊரில் கூட யாருக்கும் தெரியாது.. ஆனால் மீதி 26 ஆண்டுகளில் அவரை பற்றி தெரியாதவர்களே உலகில் கிடையாது..
        ஹிட்லரின் சாதனைகளையும் வேதனைகளையும் வரும் பதிவுகளில் காணலாம்..
(பின் குறிப்பு : நான் ஹிட்லரை பற்றி முழுமையாக தெரிந்தவன் இல்லை.. பிரபல விமர்சகர் மதனின் புத்தகத்தில் நான் படித்தவற்றை பகிர்கிறேன்.. மதன் தவறாக எண்ணமாட்டார் என்று நம்புகிறேன்.. தவறு இருந்தால் திருத்தவும்...)

No comments:

Post a Comment